<==============================================================================================================>
வலைபதிவை வாசிக்க வந்த‌ உங்களை வணங்கி வரவேற்கின்றேன் -----------------------------
<===============================================================================================================>
மோடியின் காலம் நவீன இந்திய அரசியல் வரலாற்றில் 'இருண்ட காலமென' எழுதுங்கள். -----------------------------

ஞாயிறு, 23 ஜூலை, 2017

கபடிக்கு மீண்டும் புத்துயிர்

தீக்கதிர்
சி.ஸ்ரீராமுலு

தமிழர்களின் உணர்வுகளையும், தமிழ்மண்ணின் பெருமைகளையும், பண்பாட்டையும் உலகுக்கு பறைச்சாற்றி தமிழக கிராமங்களின் உயிர்மூச்சாக விளங்குகிறது கபடி. சுமார் 4 ஆயிரம் ஆண்டுகள் பழமையான விளையாட்டு கபடியாகும். பண்டைய கால போர் வீரர்களின் வலிமை, தைரியம், திறமைகள் அனைத்திற்கும் சவாலாய் விளங்குவதும் கபடி போட்டியே.‘‘பலீஞ் சடுகுடு, பலீஞ் சடுகுடு’’ இதுதான் ஆரம்பக் கால தமிழர்களின் கபடி விளையாட்டின் பாடல்வரி. தமிழர்களின் வீர விளையாட்டான கபடி இளைஞர்கள், சிறுவர்கள், ஆண்,பெண் என அனைவரும் விரும்பி ஆடுவதாகும்.
கபடி விளையாட்டு அகில இந்திய அளவில் மட்டுமல்ல, ஆசியாவையும் தாண்டி சர்வதேச அளவில் ‘உலக கோப்பை’ வரை நீடிக்கிறது. கடந்த நூற்றாண்டு வரை புகழின் உச்சியில் இருந்த கபடி, இந்த நூற்றாண்டில் கிரிக்கெட் மோகத்தால் பின்னடைவைச் சந்தித்தது. ஆனாலும், தமிழகத்தில் தென் மாவட்டங்களில் இன்றளவும் கிராமங்களின் கோவில் திருவிழா, பண்டிகை நாட்களில் கபடி விளையாட்டுப் போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்படுகின்றன. தமிழக அரசும், முதலமைச்சர் கோப்பை கபடிப்போட்டியை நடத்தி வருகிறது.ஐபிஎல் 20 ஓவர் கிரிக்கெட், ஐசிஎல் கால்பந்து தொடர்களை தொடர்ந்து 2014 ஆம் ஆண்டு முதல்‘புரோ’ கபடி போட்டியும் நடத்தப்பட்டு வருகிறது. இதன்மூலம் ‘கபடி’ விளையாட்டுக்கு மீண்டும் புத்துயிர் கிடைத்துள்ளது.
இதனால் இளைஞர்கள் ஆர்வத்துடன் கபடியை விளையாடி வருகிறார்கள்.கடந்த நான்கு சீசனிலும் 8 அணிகள் பங்கேற்றும், பாரம்பரியமான தமிழகத்திலிருந்து இரண்டு, மூன்று வீரர்கள் மட்டுமே பங்கேற்று வந்தனர். இந்த முறை 4 அணிகள் புதிதாக இடம்பிடித்துள்ளன. அதில் ஒன்றுதான் தமிழ்நாடு தலைவாஸ். தமிழகத்திலிருந்து 25 வீரர்கள் 12 அணிகளுக்கு தேர்வாகியுள்ளது சிறப்பம்சமாகும். இதில் நெல்லை மாவட்டத்தை சார்ந்த பொறியியல் கல்லூரி மாணவன் கலையரசன் குஜராத் அணிக்கும், சேலம் செல்வமணி ஜெய்ப்பூர் அணிக்கும் தேர்வாகியுள்ளனர்.தமிழ் தலைவாஸ் அணியில் தஞ்சையை சேர்ந்த பிரபாகரன், ராஜேஷ் மனோகரன், திருச்சி திவாகரன், அனந்தகுமார் ஆகியோர் முதன் முறையாக களம் புகுகிறார்கள். நல்ல அனுபவம் மிக்க வீரராக திருவாரூர் அருண் இந்த அணியில் உள்ளார்.
கொரியா நாட்டு வீரர்களான டோங் ஜியான் லீ, சன்சிக் பார்க் ஆகியோருடன் பிற மாநிலங்களை சேர்ந்த வினீத் சர்மா, சாரங் அருண் தேஷ்முக், பவாணி ராஜ்புத், பிரபஞ்சன், சுஜித் மகாராணா, அமித்ஹீடா, விஜின் தங்கதுரை, தர்ஷன் தேவாங், மருது, முகிலன், சங்கேத், அனில் குமார், விஜய் குமார் ஆகியோர் இடம்பிடித்திருக்கிறார்கள். அணிக்கு 31 வயதாகும் அஜய் தாகூர் கேப்டனாவார். இவர் இமாச்சல் பிரதேசத்தை சார்ந்தவர் என்றாலும் உலக கோப்பையில் மிக சிறப்பாக விளையாடி இந்திய அணி சாம்பியன் பட்டத்தை தக்க வைக்க துணைநின்றவர். இந்திய அணிக்கு பயிற்சி கொடுத்த தஞ்சை மாவட்டம் சூழிக் கோட்டை கி. பாஸ்கரன்தான் தலைவாஸ் அணிக்கு பயிற்சியாளர் என்பது நமது அணிக்கு கூடுதல் பலம் சேர்க்கிறது.
இந்த மாதம் 28 ஆம் தேதி ஹைதராபாத்தில் தொடங்கும் முதல் ஆட்டத்திலேயே தமிழ் தலைவாஸ் அணி தெலுங்கு டைட்டான்ஸ் அணியை எதிர்க்கொள்கிறது. அக்டோபர் 14ஆம் தேதி நடக்கும் கடைசி லீக் போட்டியில் புனே அணியுடன் பலப்பரீட்சை நடத்துகிறது. புரோ கபடியில் சென்னையை மையமாக கொண்டு முதன் முறையாக களம் இறங்கும் ‘தமிழ் தலைவாஸ்’ அணியின் மீது கபடி மட்டுமல்லாமல் கிரிக்கெட், கால்பந்து உள்ளிட்ட பல்வேறு விளையாட்டு ரசிகர்களின் புருவங்களை உயர்த்துவதற்கு அச்சாரமாக சென்னை கிண்டியிலுள்ள தனியார் ஓட்டல் ஒன்றில் நடந்த வீரர்கள் அறிமுக நிகழ்ச்சியும் அமைந்திருந்தது. இந்த விழாவில் சென்னை மட்டுமின்றி தென்மாநிலங்களில் இருந்தும் செய்தியாளர்கள், ஊடகவியாளர்கள் நூற்றுக்கணக்கில் குவிந்ததால் அரங்கமே நிரம்பி வழிந்தது.
அணியின் உரிமையாளர்கள் நிம்மகட்டா, தெலுங்கு திரைப்படத் தயாரிப்பாளர் அல்லு அரவிந்த், நடிகர்கள் அல்லு அர்ஜூன், ராம்சரண் தேஜா ஆகியோர் வரிசையாக மேடை ஏறினர். அவர்களைத் தொடர்ந்து அணியின் இணை உரிமையாளர் கிரிக்கெட் ஜாம்பவான் சச்சின் டெண்டுல்கர், அணியின் விளம்பர தூதர் நடிகர் கமல்ஹாசன் ஆகியோர் பெயரை அறிவித்ததும் அரங்கமே அதிரும் அளவுக்கு கைத்தட்டல், அடங்குவதற்கு நீண்டநேரம் ஆனது.அணியின் சின்னம், வீரர்களின் அதிகாரப்பூர்வ உடை பயிற்சியாளர்கள் மற்றும் வீரர்களை ஒருசேர மேடையில் அறிமுகப்படுத்தினார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக